Thursday 2 June 2011

கங்குலிக்கு எதிரான போட்டியல்ல

கோல்கட்டா: 
     ""புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டி, கங்குலிக்கு எதிரானதல்ல,'' என, கோல்கட்டா அணி கேப்டன் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இருப்பினும் "டக்வொர்த்த-லீவிஸ்' முறைப்படி கோல்கட்டா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 19ம் தேதி மும்பையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் புனே வாரியர்ஸ்-கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

     இதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில், புனே அணிக்கு எதிரான போட்டி கங்குலிக்கு எதிரானதல்ல. கங்குலி, புனே அணியில் இடம் பெற்றுள்ளார் அவ்வளவுதான். இதனை கோல்கட்டா-புனே அணிகளுக்கு எதிரான போட்டியாகவே கருதுகிறேன்.

சென்னை அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, "டாப்-4' இடத்தை தக்கவைத்துக் கொள்வதே இலக்காக கொண்டுள்ளோம். இப்போட்டியின் வெற்றிக்கு பவுலர்களே முக்கிய காரணம். குறிப்பாக பிரட் லீ, இக்பால் அப்துல்லா இருவரும் மிகவும் அருமையாக பந்துவீசினர். பிரட் லீயிடம் இருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச அனுபவம் வாய்ந்த இவர், ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அடுத்த போட்டியில் எழுச்சி பெற்றுவிடுவார். இது இவரது சிறப்பம்சம். 
     பிராட் ஹாடினுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், சிறந்த பேட்ஸ்மேன். இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.இவ்வாறு காம்பிர் கூறினார்.

No comments:

Post a Comment