Tuesday 10 May 2011

ஆடுகள சர்ச்சை

புதுடில்லி: 
     "எந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பதை, அதன் பராமரிப்பாளர் தான் முடிவு செய்வார். இதில், அணிகளுக்கு எந்த உரிமையும் இல்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிரடியாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்த போட்டிகளில் கொச்சி 109, மும்பை 94, புனே 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணி கேப்டன் சச்சின், ஆடுகளம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
     இதனால் நேற்று முன்தினம், ஆடுகளம் மாற்றப்பட, சென்னை அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்ன் கூறுகையில்,"" கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாடிய ஆடுகளத்தை விட்டுவிட்டு, திடீரென வேறு ஆடுகளத்தில் விளையாடுமாறு உத்தரவிட்டனர். இது தான் தோல்விக்கு காரணம்,'' என, கோபமாக தெரிவித்தார்.
இதுகுறித்து, ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி, தனது "டுவிட்டரில்' கூறுகையில்,"" ஆடுகளம் மாற்றத்துக்கு பி.சி.சி.ஐ., செயலரும், சென்னை அணி உரிமையாளரும் சீனிவாசன் காரணமாக இருக்கலாம்,'' என, புதிய புயலை கிளப்பினார்.
     இந்த பிரச்னைக்கு தற்போது பி.சி.சி.ஐ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுபற்றி அது வெளியிட்ட அறிக்கையில்,"ஐ.பி.எல்., தொடர் துவங்கும் முன்பும், நடக்கும் போது அனைத்து மைதானங்களுக்கும் சென்ற பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டி, வேக மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிற்கும் சமமாக ஒத்துழைக்கும் வகையில் தான் "பிட்ச்' இருக்க வேண்டும் என தெரிவித்தது. தவிர, இதைத் தேர்வு செய்வது அணிகளின் கையில் இல்லை. ஆடுகள தயாரிப்பாளர் மற்றும் கமிட்டி தான், எந்த "பிட்ச்' என்று முடிவு செய்யும்,' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment