Sunday 15 May 2011

டெக்கான் அபாரம்

     ஐ.பி.எல்., லீக் போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய மும்பை அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பவுலிங்கில் எழுச்சி கண்ட டெக்கான் அணி, இத்தொடரின் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.நான்காவது ஐ.பி.எல்., தொடரின் 59வது லீக் போட்டி, மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
 
     டெக்கான் அணி ரன் கணக்கை துவக்கும் முன், லம்ப் போல்டாகி அதிர்ச்சி தந்தார். சற்றுத் தாக்குப்பிடித்த, மற்றொரு துவக்க வீரர் சன்னி சோகல் 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்ககராவும் (27) நிலைக்கவில்லை. "மிடில் ஆர்டரில்' டுமினி (8) ஏமாற்றினார். சிப்லி (10), கிறிஸ்டியனை (18) குல்கர்னி கவனித்துக் கொண்டார். முனாப் படேல் வீசிய கடைசி ஓவரில் அமித் மிஸ்ரா, தொடர்ச்சியாக நான்கு பவுண்டரி விளாசி அசத்தினார். டெக்கான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. சிகர் தவான் (27), அமித் மிஸ்ரா (18) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் குல்கர்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.
 
சச்சின் ஆறுதல்:
 
     எளிதான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டுமினியின் சுழலில் பிலிஜார்டு (1) சிக்கினார். அம்பதி ராயுடு (2), ரோகித் சர்மா (4) ஆகியோரும் அணியை கைவிட, மும்பை அணி 25 ரன்னுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
 
     நீண்ட நேரம் தடுமாறிய சைமண்ட்ஸ், 19 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். இரண்டு சிக்சர் அடித்த சுமன் (14), ஆனந்த் ராஜன் வேகத்தில் வீழ்ந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில், பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் (37), அவுட்டாக, மும்பை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
 
மும்பை தோல்வி:
 
     கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு, 26 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் போலார்டு, "சூப்பர்' சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் "வைடு' உட்பட 3 ரன்கள் எடுக்கப்பட்டது. 3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த போலார்டு (24), அடுத்த பந்தில் வீழ்ந்தார். கடைசி 2 பந்தில் 13 ரன் தேவை என்ற நிலையில், மலிங்கா "டக்' அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஹர்பஜன் (17), குல்கர்னி (0) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணியின் ஆனந்த் ராஜன், 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.

முனாப்-மிஸ்ரா 
     
     நேற்று முனாப் படேல் (மும்பை) வீசிய, 20வது ஓவரின் முதல் பந்தில், சிகர் தவான் சிக்சர் அடித்தார். "ஷார்ட் பிட்ச்சாக' வந்த 3வது பந்தை அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் அமித் மிஸ்ரா, சிகர் தவானுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் முனாப் படேல். பின் 5 வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பி, ரன் எடுக்க முயன்ற போது முனாப் படேல்-அமித் மிஸ்ரா இருவரும் மோதிக் கொண்டு, மறுபடியும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment