Tuesday 17 May 2011

மிஸ்ரா ஜாலம் - டெக்கான் கலக்கல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 62வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா "பீல்டிங்' தேர்வு செய்தார்.
 
விக்கெட் சரிவு:
 
     புனே அணிக்கு ஜெசி ரைடர், மனிஷ் பாண்டே இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். டுமினி வீசிய முதல் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, ரைடர் ஒரு இமாலய சிக்சர் அடித்தனர். ஸ்டைன் வேகத்தில் ரைடர்(18) வெளியேறினார். இதற்கு பின் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஓஜா சுழலில் கங்குலி "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஓஜா பந்தில் பாண்டேவும்(23) வீழ்ந்தார்.
 
     போட்டியின் 8வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா இரட்டை "அடி' கொடுத்தார். 4வது பந்தில் உத்தப்பாவை(4) வெளியேற்றினார். 5வது பந்தில் மன்ஹாஸ்(0) போல்டானார். அடுத்து வந்த பெர்குசன் தடுத்து ஆட மிஸ்ராவின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. அப்போது புனே அணி 5 விக்கெட்டுக்கு 45 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
 
     பின் பெர்குசன், கேப்டன் யுவராஜ் இணைந்து போராடினர். ஓஜா சுழலில் யுவராஜ் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். டுமினி வலையில் பெர்குசன்(11) சிக்கினார். கிறிஸ்டியன் பந்தில் யுவராஜ்(23) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் கைகொடுத்தார். அமித் மிஸ்ரா, ஓஜா பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்ட இவர் 37 ரன்கள் எடுத்தார். பார்னல்(16) ரன் அவுட்டானார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது.
 
அசத்தல் ஆட்டம்:
 
     சுலப இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு ஷிகர் தவான், சன்னி சோகல் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். மிட்சல் மார்ஷ் ஓவரில் சோகல் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் பந்தில் தவான்(28) அவுட்டானார். ராகுல் சர்மா சுழலில் சோகல்(34) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சங்ககரா(25), ராகுல் சர்மா பந்தில், விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் "கேட்ச்' கொடுத்தார். "அவுட்' என தெரிந்ததும், அம்பயரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் தானாகவே வெளியேறி "ஜென்டில்மேனாக' நடந்து கொண்டார் சங்ககரா.
 
     பின் கிறிஸ்டியன், டுமினி இணைந்து நம்பிக்கை தந்தனர். யுவராஜ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த டுமினி 23 ரன்கள் எடுத்தார். பார்னல் பந்தில் சிப்லி ஒரு அசத்தல் பவுண்டரி அடிக்க, டெக்கான் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. இத்தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை புனே அணி இழந்தது.ஆட்ட நாயகன் விருதை அமித் மிஸ்ரா வென்றார்.

No comments:

Post a Comment