Tuesday 10 May 2011

பஞ்சாப் அணியிடம் பணிந்தது மும்பை!

மொகாலி: 
     ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. நேற்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய முனாப் படேலின் பந்துவீச்சு வீணானது.
   இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த 54வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வல்தாட்டி ஏமாற்றம்:
     பஞ்சாப் அணி துவக்கத்தில் திணறியது. ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த வல்தாட்டி அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்களுக்கு முனாப் வேகத்தில் வீழ்ந்தார். பின் கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் இணைந்து அசத்தினர். குல்கர்னி ஓவரில் மார்ஷ் 2 பவுண்டரி விளாசினார். ரோகித் சர்மா பந்தில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். இதற்கு பின் முனாப் படேல் வேகத்தில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 39 ரன்களுக்கு இழந்தது. 16வது ஓவரை வீசிய முனாப் இரட்டை "அடி' கொடுத்தார். 2வது பந்தில் மார்ஷ்(43) அவுட்டானார். 6வது பந்தில் டேவிட் ஹசி(0) வெளியேறினார்.
     
     குல்கர்னி வீசிய போட்டியின் 17வது ஓவரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா ஒரு சிக்சர் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். மன்தீப் சிங்(8) ரன் அவுட்டானார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக்(31), ஹாரிசை(6) அவுட்டாக்கிய முனாப் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
விக்கெட் மடமட:
     சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பிலிசார்ட் அதிரடி துவக்கம் தந்தார். இவர், பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தனது அடுத்த ஓவரில் சச்சினை(6) வெளியேற்றிய பிரவீண் திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்கு பின் வந்தவர்கள் ஏனோதானோ என ஆடினர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இம்முறை பஞ்சாப் பவுலர்கள் "செக்' வைத்தனர். பிலிசார்ட்(15), ரோகித்(5), சைமண்ட்ஸ்(8), ராயுடு(13), ஹர்பஜன்(12) ஏமாற்றினர். பார்கவ் பட் ஓவரில் போலார்டு(17), குல்கர்னி(2), முனாப்(0) வரிசையாக நடையை கட்டினர். மும்பை அணி 12.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை பார்கவ் பட் வென்றார்.

No comments:

Post a Comment