Wednesday 11 May 2011

கங்குலி கலக்கல் -> புனே வாரியர்ஸ் அபார வெற்றி

ஐதராபாத்: 
     ஐ.பி.எல்., லீக் போட்டியில் மனிஷ் பாண்டேயின் அதிரடி கைகொடுக்க, புனே வாரியர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எட்டாவது தோல்வியை சந்தித்த டெக்கான் சார்ஜர்ஸ், முதல் அணியாக வெளியேறியது.
     ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் 53வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நடந்தது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. ஏறக்குறைய இரு அணிகளும், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், "டாஸ்' வென்ற டெக்கான் அணி கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
கங்குலி அறிமுகம்:
     நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, கடந்த வாரம் புனே அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் கடந்த இரண்டு போட்டிகளாக களத்துக்கு வெளியே உட்கார்ந்திருந்த கங்குலி, நேற்று முதன் முதலாக களமிறங்கினார்.
ஆறுதல் ஜோடி:
     டெக்கான் அணிக்கு சிகர் தவான், ரவி தேஜா இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். வாக் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த ரவி தேஜா, ரன்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். ராகுல், பார்னல் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார் சிகர் தவான். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தபோது, சிகர் தவான் (24) யுவராஜ் சிங் சுழலில் சிக்கினார். அடுத்த சில நிமிடங்களில் ரவி தேஜாவும் (30) வீழ்ந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சங்ககரா (12) அணியை கைவிட்டு திரும்பினார். டேனியல் கிறிஸ்டியன் (10), மறுபடியும் ஏமாற்றினார்.
மார்ஷ் அபாரம்:
     போட்டியின் 19வது ஓவரை வீசிய மார்ஷ், டெக்கான் அணிக்கு "வில்லனாக' மாறினார். இதன் முதல் பந்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்த டுமினியை (30) வெளியேற்றினார். இதேஓவரின் 4, 5வது பந்தில் சன்னி சோகல், அமித் மிஸ்ரா இருவரையும் "டக்' அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார்.
ஸ்டைன் 11 ரன்கள் எடுத்தார். டெக்கான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது. சிப்லி (18), இஷாந்த் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். பவுலிங்கில் அசத்திய புனே அணியின் மார்ஷ் 4, யுவராஜ் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
     போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய புனே அணிக்கு ரைடர், மனிஷ் பாண்டே ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. ஸ்டைன் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரைடர், அடுத்து இஷாந்த் சர்மாவையும் விட்டுவைக்கவில்லை. ரைடர்(35), பிரக்யான் ஓஜாவின் சுழலில் போல்டானார்.
பாண்டே அசத்தல்:
     இதற்குப் பின் ரன்குவிக்கும் பொறுப்பை, மனிஷ் பாண்டே தன் கையில் எடுத்துக் கொண்டார். டுமினியின் ஒரே ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த இவர், 49 ரன்கள் (42 பந்து) எடுத்து அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
நிறைவேறிய எதிர்பார்ப்பு:
     "அதிரடி' உத்தப்பா (1), அம்பயரின் தவறான தீர்ப்பில் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குலி, தனது தேர்வை நியாயப்படுத்தினார். அமித் மிஸ்ரா பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்த இவர், ஸ்டைன், இஷாந்த் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி நம்பிக்கை தந்தார். மறு முனையில் கேப்டன் யுவராஜ் சிங் (2) சொதப்பினார்.
கடைசி நேரத்தில் பெர்குசன், "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, புனே வாரியர்ஸ் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 137 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
கடினமான நாள்
      புனே வாரியர்ஸ் அணியின் கங்குலி கூறுகையில், ""எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நேற்று தான் கடினமான நாள். ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக பேட்டிங் செய்யாத நிலையில், மிகவும் தன்னம்பிக்கையின்றி களமிறங்கினேன். இருப்பினும், இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

No comments:

Post a Comment