Saturday 14 May 2011

கார்த்திக் அதிரடி - பஞ்சாப் வெற்றி

இந்தூர்: 

     ஐ.பி.எல்., லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பவுலிங்கில் சொதப்பிய கொச்சி அணி, இத்தொடரின் ஏழாவது தோல்வியை பதிவு செய்தது.நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இந்தூரில் நடந்த லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட், பீல்டிங் தேர்வு செய்தார்.
 
சூப்பர் துவக்கம்:
 
     கொச்சி அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, மெக்கலம் ஜோடி இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஹாரிசின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பவுண்டரியுடன் அதிரடியை துவக்கினார் ஜெயவர்தனா. இவரது ஓவரில் தன் பங்கிற்கு 2 சிக்சர் அடித்து மிரட்டினார் மெக்கலம். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில், மெக்கலம் (32) அவுட்டானார்.பின் வந்த ஜடேஜா (17), ஹாட்ஜ் (4) நிலைக்கவில்லை. ஓவைஷா (23), ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல் "டக்' அவுட்டாக, கோமெஜ் 2 ரன் மட்டும் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும், அதிரடியில் அசத்திய ஜெயவர்தனா, (76 ரன்கள், 52 பந்து) கடைசியில் ரன் அவுட்டானார். கொச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 178 ரன்கள் எடுத்தது.
 
பெரிய இலக்கு:
 
     கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு வல்தாட்டி (17) மீண்டும் ஏமாற்றம் தந்தார். கில்கிறிஸ்ட் (9) சொதப்பினார். இதன் பின் இணைந்த மார்ஷ், தினேஷ் கார்த்திக் ஜோடி, மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் தினேஷ் கார்த்திக், சிக்சர் மழை பொழிந்தார். வினய் குமார், கோமெஜ் மற்றும் பரமேஷ்வரன் என யாரையும் இவர் விட்டுவைக்கவில்லை. ஹாட்ஜ், ஜடேஜா ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் விளாசிய இவர், 3வது ஐ.பி.எல்., அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், தினேஷ் கார்த்திக் 69 ரன்னில் (7 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார். இதேஓவரின் கடைசி பந்தில் மார்ஷ் (42) வீழ்ந்தார்.பின் வந்த ஹசி (21), மந்தீப் சிங் (15) இணைந்து, ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment